Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தல்

ஏப்ரல் 23, 2022 11:40

புதுடெல்லி: நம் நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. இது, நான்காவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

'இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது அவசியம்' என, மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். நாட்டில், கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதற்கிடையே, கொரோனா பரவலை தடுக்க, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இரண்டு 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தியோருக்கு, முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும், 'பூஸ்டர் டோஸ்' செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் புதிதாக 2,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, நம் நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, நான்கு கோடியே 30 லட்சத்து 52 ஆயிரத்து 425 ஆக உயர்ந்துஉள்ளது.

மார்ச் 18க்குப் பின், ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.இதேபோல், நேற்று முன்தினம் 54 பேர் கொரோனாவால் உயிர்இழந்தனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை, ஐந்து லட்சத்து 22 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 14 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், நான்காவது அலை துவங்கி உள்ளதா என, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விஞ்ஞானியும், இந்திய வம்சாவளியுமான டாக்டர் அமிதா குப்தா நேற்று கூறியதாவது:ஒருபுறம், மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. மறுபுறம், மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ்கள் உருவாகின்றன. எனவே, அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளுடன், பூஸ்டர் டோசும் செலுத்திக் கொள்வது அவசியம்.

மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை, கொரோனாவில் இருந்து யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. 20 சதவீத மக்கள்அதிக வருவாய் ஈட்டும் நாடுகள் மற்றும் நடுத்தர நாடுகளில் மட்டும், பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

56 நாடுகளில், 10 சதவீத மக்களுக்கு கூட தடுப்பூசி செலுத்தப்படவில்லை. குறிப்பாக, ஆப்ரிக்க கண்டத்தில் 20 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள சில நாடுகளில், 2 சதவீதத்திற்கு குறைவான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இந்தியாவில், 2 சதவீத மக்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.டில்லியில் கட்டுப்பாடு அதிகரிப்புடில்லியில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், நேற்று புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அங்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்வோருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.இதேபோல், பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர் களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும், வகுப்பில் கொரோனா அறிகுறிகளுடன் யாராவது இருந்தால், அதுகுறித்து தலைமை ஆசிரியர் வாயிலாக, மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்