Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் ஒருவருக்கு கொரோனா எக்ஸ் இ தொற்று

ஏப்ரல் 22, 2022 11:42

திருவனந்தபுரம்: கொல்லம் பகுதியில் வீடு,வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

உலகையே மிரட்டிய கொரோனா தொற்று இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

 சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற கேரள மாணவிகள், அங்கு கொரோனா பரவ தொடங்கியதும் ஊர் திரும்பினர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

பின்னர் இந்த பாதிப்பு அதிகரித்து நாடு முழுவதும் பரவியது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அலை வீசி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இதன் 4-ம் அலை பரவி வருவதாக உலக நாடுகள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொரோனா எக்ஸ் இ எனப்படும் இந்த வகை தொற்று தற்போது சீனாவில் பரவி வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்த அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தியாவிலும் இந்நோய் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் முதன்முதலாக கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து ராஜீவ்காந்தி பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்த தொற்று கொரோனா எக்ஸ் இ வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார்.

நோய் பாதிப்புக்கு உள்ளான வாலிபரின் பயண விபரம், அவர் யார்-யாருடன் தொடர்பில் இருந்தார் என்பன போன்ற தகவல்களை சுகாதாரத்துறையினர் திரட்டி வருகிறார்கள்.

மேலும் கேரளாவில் கொரோனா எக்ஸ் இ பரவலை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக கொல்லம் பகுதியில் வீடு,வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்