Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

படம் தோல்வியடைந்தாலும் 100 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கும் நடிகர்கள்: தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு

ஏப்ரல் 17, 2022 12:23

சென்னை: 'தமிழ் சினிமாவில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், படம் தோல்வியடைந்தாலும், சம்பளத்தை உயர்த்துகின்றனர். ஆனால் தயாரிப்பாளர் நிலை கேள்விக்குறி ஆகிறது' என, தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

'காதல்' சுகுமார் நடித்துள்ள, 'தொடாதே' படத்தின் இசை வெளியிட்டு விழாவில், தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து, பெரிதாக வெற்றி பெறும் படங்கள் தான் பெரிய படம். பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்கள் சிறிய படம்தான். பல கோடி ரூபாய் செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுத்த படம், 30 கோடி ரூபாய் தான் வசூலிக்கிறது. ஆனால், ஹீரோக்கள் மட்டும் சம்பளத்தை, 110 கோடி ரூபாய்க்கு உயர்த்தி விடுகிறார்கள்.

இப்ப கூட, 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்த நடிகர், 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். '100 கோடிக்கு மேல் இருந்தால் வாங்க, இல்லைனா வராதீங்க' என்கிறாராம். நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.'பீஸ்ட்' படம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். அந்தப்படத்தை பற்றி எனக்கென்ன கவலை. இதை சொல்வதற்காக நான் பயப்படவில்லை. காரணம், நான் விஜய் கிட்ட தேதியோ, பணமோ கேட்டு நிற்கப் போறதில்லை. தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும்; அதற்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

'ஆதார்' பட இசை வெளியீட்டு விழாவில், இயக்குனரும், தயாரிப்பாளருமான பாரதிராஜா பேசியதாவது: எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால், அதிலும் சினிமாக்காரன் ஆகவே பிறக்க வேண்டும். இங்கு நமக்கு கிடைக்கும் பெயரும், புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை.

நடிகர்கள் சம்பளம் வாங்குவது தவறு என சொல்லவில்லை. ஆனால், ஒரு பட தயாரிப்பில் உங்களுடைய பங்கு எவ்வளவு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில், தமிழ், மலையாள சினிமாக்களை விட, தெலுங்கு சினிமா ஒருபடி உயர்வாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்