Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக மாணவர்களை வீணாக குழப்பி வருகிறது; நீட் விலக்கு சாத்தியமில்லை: பொள்ளாச்சி ஜெயராமன்

ஏப்ரல் 16, 2022 10:45

பொள்ளாச்சி: ''கவர்னர் அனைவருக்கும் பொதுவானவர்; அவருடன் சுமுகமான உறவு தேவையே தவிர, தி.மு.க., அரசின் மோதல் போக்கு என்பது அநாகரிகமான செயல்,'' என எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.

பொள்ளாச்சியில் எம்.எல்.ஏ., ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:கவர்னர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர். அவரை மாநில அரசு பகைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 'நீட்' தேர்வு குறித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்த பிறகு தி.மு.க., அரசு, நிறைவேற்றிக்காட்டுவேன் என மக்களிடம் நாடகமாடியது.அதற்காகவே கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், மாநில அரசு என்ன செய்ய முடியும். வீணாக மாணவர்களை குழப்பி, வாழ்வில் பின்னடைவு ஏற்படுத்தக்கூடாது. நீட் விலக்கு என்றால், இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் தான் பெற முடியும்; தமிழகத்துக்கு மட்டும் தனியாக பெற முடியாது.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால் தான், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் புதியதாக, 11 மருத்துவ கல்லுாரிகள் கொண்டு வரமுடிந்தது. மருத்துவ கல்லுாரியில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் கிராமப்புறங்களில் உள்ள, 500 மாணவ, மாணவியர் மருத்துவ கல்லுாரியில் சேர முடிந்தது.அதற்கான செலவை அரசே ஏற்கும் என சட்டமும் கொண்டு வரப்பட்டது. கவர்னருடன் சுமுகமான உறவு தேவையே தவிர, மோதல் போக்கு என்பது அநாகரிகமான செயல். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்