Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத்தில் எக்ஸ்.இ., கொரோனா முதல் பாதிப்பு

ஏப்ரல் 10, 2022 11:14

ஆமதாபாத்: புதிதாக உருமாறியுள்ள, 'ஒமைக்ரான் எக்ஸ்.இ.,' என்ற கொரோனா வைரஸ் பாதிப்பு குஜராத்தில் முதல் முறையாக பதிவாகியுள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் புதிதாக உருமாற்றம் அடைந்து உள்ளது. ஒமைக்ரான் எக்ஸ்.இ., என்ற இந்த வகை வைரஸ், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் முதலில் தென்பட்டது. 'மற்ற கொரோனா வைரஸ் வகைகளை விட இது மிக வேகமாக பரவக் கூடியது' என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த நபருக்கு குஜராத்தின் வதோதராவில் செய்யப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

குஜராத்தில் பதிவான முதல் பாதிப்பு இதுவாகும்.கடந்த மாதம், 12ம் தேதி, தன் மனைவியுடன் வதோதராவுக்கு வந்த அந்த நபருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதையடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில், அவருடைய மாதிரிகள் தீவிர பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவுகள் நேற்று வெளியாயின. அதில், அந்த நபருக்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது உறுதியாகி உள்ளது.இதற்கிடையே, அந்த நபர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக குஜராத் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

முன்னதாக தென் ஆப்ரிக்கா சென்று திரும்பிய மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது.

ஆனால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதை உறுதி செய்யவில்லை. ஐ.நா., எச்சரிக்கைகொரோனா வைரஸ் தொடர்பாக நடந்த கருத்தரங்கில், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் பேசியதாவது:நான்கு மாதங்களுக்கு ஒரு முறை புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தென்பட்டு வருகிறது.

அதனால், கொரோனா வைரஸ் பரவல் முடிந்து விட்டதாக கருத முடியாது. நாளொன்றுக்கு, 15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது, ஆசியாவில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை உருமாறிய வைரஸ் பரவி வருகிறது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதே, கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி.இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்