Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மார்ச் 29, 2022 02:55

சென்னை : 'சட்டம் - ஒழுங்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், சமூக விரோதிகளை அடக்க வேண்டும்' என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில் 10 மாதங்களாக, சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. சமூக விரோதிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் கைகளில், தமிழகம் சிக்கி சீரழிந்து வருகிறது. பாலியல் குற்றம்தினமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், செயின் பறிப்பு சம்பவங்கள், பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.

விருதுநகர் மற்றும் வேலுார் மாவட்டங்களில் நடந்த கூட்டு பலாத்காரத்தை தொடர்ந்து, ராமநாதபுரத்தில் கல்லுாரி மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை கிராமத்தில் உள்ள தி.மு.க., நிர்வாகி, 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துஉள்ளார்.மதுரை திருப்பரங்குன்றத்தில், பிளஸ் 1 படிக்கும் சிறுமியை, தி.மு.க., கிளைச் செயலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த அவலத்தின் ஈரம் காயும் முன், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் கஞ்சா வியாபாரிகள், போலீஸ் மீது வெடிகுண்டு வீசி தப்பி உள்ளனர். சென்னையில் துப்பாக்கியுடன் போதை மாத்திரை விற்பனையில், ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.சமூக விரோதிகளை கட்டுப்படுத்த இயலாதபடி, போலீஸ் துறையினரின் கைகளை கட்டியது யார் என, முதல்வர் விளக்க வேண்டும்.

இனியாவது, சட்டம் - ஒழுங்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.எதிர்ப்புஅ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:சட்டசபையில், நிதி அமைச்சர் தியாகராஜன், 'சொத்து வரி, தொழில் வரி, பதிவுக் கட்டணம், வணிக வாகனங்களுக்கான கட்டணம் என எதையும் உயர்த்தவில்லை.

இவற்றை சரி செய்தால் தான் நன்றாக இருக்கும்' என கூறியிருக்கிறார்.அதேபோல், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேட்டி யில், 'அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவற்றில் சிறிதளவு மாற்றம் இருக்கும்' என தெரிவித்துள்ளார்.

இரண்டு அமைச்சர்களின் பேச்சும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் செயலாக உள்ளது. நலத்திட்ட பயனாளிகள் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். மின்சார கட்டணம், பஸ் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, முத்திரை கட்டணத்தை உயர்த்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்