Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களில் டீசல் வாங்குவதை நிறுத்திய தமிழக அரசு

மார்ச் 21, 2022 11:18

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் தினமும் சுமார் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு தினமும் 16 லட்சம் லிட்டர் டீசல் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல்- டீசல் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் கடந்த 136 நாட்களாக பெட்ரோல்- டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை. 5 மாநில தேர்தல்களுக்கு பிறகு பெட்ரோல்- டீசல் விலை உயரும் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.

அதே சமயத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிக அளவில் மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்லரை விற்பனை நிலையங்களில் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே மொத்தமாக டீசலை கொள்முதல் செய்பவர்கள் இனி பெட்ரோல் நிலையங்களில் இருந்து டீசலை கொள்முதல் செய்ய தொடங்குவார்கள் என்று தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மேலும் இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதை உறுதிபடுத்தும் வகையில் மொத்தமாக டீசலை கொள்முதல் செய்பவர்கள் இன்று முதல் தங்களது கொள்முதலை நிறுத்தத் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு மத்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்துதான் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் தினமும் சுமார் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளுக்கு தினமும் 16 லட்சம் லிட்டர் டீசல் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. வழக்கம் போல எண்ணெய் நிறுவனங்களிடம் டீசல் கொள்முதல் செய்தால் போக்குவரத்துக் கழகங்கள் கூடுதல் விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

அந்த வகையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.3.5 கோடி இழப்பு ஏற்படும். ஆண்டு ஒன்றுக்கு 1,277 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகங்கள் இழக்க நேரிடும். ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

தற்போது மொத்தமாக டீசல் கொள்முதல் செய்தால் கூடுதல் விலை கொடுக்கும் பட்சத்தில் இழப்பு அதிகரிக்கும். அந்த இழப்பை சரிகட்ட வேண்டுமானால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் உருவாகும். எனவே பஸ் கட்டண உயர்வை தவிர்க்க மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த தமிழக போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி மொத்தமாக மத்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்தி இருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பதில் சில்லரை விற்பனை முகவர்கள் மூலம் டீசல் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ் கட்டண உயர்வை தடுக்க முடியும் என்று போக்குவரத்துக் கழக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2013-ம் ஆண்டில் இதேபோன்று மொத்த டீசல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு சில்லரை விற்பனை நிலையங்களில் டீசலை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் பயணிகளுடன் பஸ்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காத்து நின்று டீசல் நிரப்பி சென்றதை காண முடிந்தது. ஆனால் தற்போது சில்லரை விற்பனையாளர்கள் அதிக டீசலை போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கே அளிக்க உள்ளனர். எனவே அரசு பேருந்துகள் சில்லரை விற்பனை மூலம் டீசலை பெற்று கூடுதல் இழப்பை தவிர்க்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்