Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி., தேர்தல் முடிவுகள் நல்ல பாடம் கற்று கொடுத்துள்ளது: மாயாவதி

மார்ச் 11, 2022 02:55

லக்னோ: உ.பி., தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்று கொண்டு, மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உ.பி., சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முன்பு ஆளுங்கட்சியாக இருந்த அக்கட்சி தற்போது ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவு தொடர்பாக நிருபர்களை சந்தித்த அக்கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்பார்ப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. இதனால், தளர்ந்து போக மாட்டோம். மாறாக அதில் இருந்து பாடம் கற்று கொள்வதுடன், தேர்தல் முடிவுகளை மறு ஆய்வு செய்து கட்சியை முன்னெடுத்து செல்வதுடன், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்.

2017 க்கு முன்னர் உ.பி.,யில் பா.ஜ.,விற்கு நல்ல தளம் இல்லை. தற்போது அதேபோன்ற சூழ்நிலையில் காங்கிரஸ் உள்ளது. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதற்கு உ.பி., தேர்தல் முடிவுகள் நல்ல பாடம் கற்று கொடுத்துள்ளது.எங்களுக்கு எதிரான தவறான பிரசாரம் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் பா.ஜ.,வின் ‛பி டீம்' என பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மையில், அரசியல் ரீதியில் மட்டும் அல்லாமல், கொள்கை ரீதியிலும், தேர்தல் ரீதியிலும் பா.ஜ.,வை எதிர்த்து பகுஜன் சமாஜ் போராடி வருகிறது. இவ்வாறு மாயாவதி கூறினார்.

தலைப்புச்செய்திகள்