Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உக்ரைன் எல்லையில் இருந்து இந்தியர்கள் போலந்திற்குள் செல்ல 10 பேருந்துகள் இயக்கம் - தூதரகம் தகவல்

பிப்ரவரி 28, 2022 10:10

வார்சா: ரஷியா-உக்ரைன் போர் காரணமாக வான் பகுதியை உக்ரைன் மூடியுள்ளது. இதனால் அங்கு பயணிகள் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி சவாலாக மாறியுள்ளது. மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கி யிருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.

உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டாலும், உக்ரைன் வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.  அங்கிருந்து அவர்கள் ருமேனியா தலைநர் புகாரெஸ்ட்டிற்கும், ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டுக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். 

பின்னர் அங்கிருந்து ஆபரேஷன் கங்கா  திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எல்லை வழியே போலந்திற்குள் நுழைவதற்கு இன்று முதல் உக்ரைன் எல்லையில் உள்ள ஷெஹினியில் இருந்து 10 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலந்தின் வார்சாவில் உள்ள இந்திய தூதரகம், தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைனில் இருந்து போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக் குடியரசு உள்ளிட்டு நாடுகளின் எல்லை வழியே வெளியேறும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக 24x7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அந்த கட்டுப்பாட்டு மையங்களை தொடர்பு கொள்ள வசதியாக தொலைபேசி எண்களும், இ-மெயில் முகவரிகளும் கொடுக்கப் பட்டுள்ளன.  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொள்ள 1800118797 என்ற எண்ணை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்