Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்- அதிகாரிகளுடன் இன்று பேச்சுவார்த்தை

பிப்ரவரி 28, 2022 10:03

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறும் போது, ‘தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று முதல்-அமைச்சர் கூறி இருந்தார். வருகிற பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் முதல்- அமைச்சரின் பிறந்தநாள் பரிசாக இதனை அறிவித்து எங்கள் வாழ்க்கை வாழ்வாதாரத்திற்கு வித்திடுவார் என்று நம்புகிறோம்’ என்றார்.

இதற்கிடையில் பிரதிநிதிகள் தலைமை செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கோரிக்கை மனு பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் மூலம் அரசுக்கு தங்களுடைய நிலைமையை உணர்த்திய பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து ஆசிரியர் பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தலைப்புச்செய்திகள்