Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதியில் ரூ.5 கோடியை தாண்டிய உண்டியல் வசூல்

பிப்ரவரி 26, 2022 03:10

திருப்பதி : திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருமானமும் அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது ரூ.5 கோடியை உண்டியல் வசூல் தாண்டியுள்ளது.

கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்தில் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ரூ.300 கட்டண விரைவு தரிசனத்தில் 25 ஆயிரம் பேர் தரிசனத்திற்காக தினசரி அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இலவச தரிசனத்தில் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதனால் வெள்ளிக்கிழமைகளில் பரிந்துரை கடிதங்களுக்கு அளிக்கப்படும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் புரோட்டோகால் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே தரிசனம் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் கூடுதலாக 2 மணி நேரம் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலமாக பணம் செலுத்தி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருமலை ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் 58 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,977 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.21 கோடி உண்டியல் வசூலானது. திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருமானமும் அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது ரூ.5 கோடியை உண்டியல் வசூல் தாண்டியுள்ளது.  திருப்பதியில் நேற்று 56,559 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28751 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.5.41 கோடி உண்டியல் வசூலானது.

தலைப்புச்செய்திகள்