Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் ஆணையம் தி.மு.க.வினரின் அத்துமீறலை தடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பிப்ரவரி 16, 2022 07:10

சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நியாயமான தேர்தலாக நடைபெற வேண்டும். மாநிலத்தின் பல பகுதிகளில் தி.மு.க வும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் ஆணைய கோட்பாடுகளை, விதிமுறைகளை மீறியே செயல்படுகிறது. இதற்கு காரணம் அதிகார பலம், பண பலம், ஆள்பலம். தேர்தல் முறையாக, சரியாக, நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையது.

ஆனால் ஆளும் தி.மு.க வினரும், கூட்டணி கட்சியினரும் பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்வதும், பரிசுப்பொருட்கள், கூப்பன் வழங்குவதும் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. இந்தநிலையில் மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விதிமுறைகளை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மீது தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணைய கோட்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவானது. மேலும் தேர்தல் ஆணையம் கண்காணிப்போடு செயல்பட்டு தேர்தல் நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

தேர்தலானது ஆட்சி அதிகாரத்துக்காக நடைபெறாமல் மக்கள் நலன் காப்பதற்காக நடைபெற வேண்டும். எனவே தேர்தல் ஆணையம், மாநிலம் முழுவதும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

தலைப்புச்செய்திகள்