Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை

பிப்ரவரி 10, 2022 02:17

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜானகிராமன் (வயது 35) போட்டியிட்டார். அவர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜானகிராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் ஜானகிராமன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தான் போட்டியிடும் வார்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாற்று கட்சியை சேர்ந்தவர்களிடமும் அவர் தனக்கு ஆதரவு தரும் படி கேட்டு வந்தார்.

அவருக்கு மாற்று கட்சியை சேர்ந்த சிலரும் மறைமுகமாக ஆதரவு அளித்தது வந்துள்ளனர். நேற்று இரவு அவர் வழக்கம் போல் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஜானகிராமன் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வேணுகோபால் சென்று பார்த்த போது அறையில் மகன் ஜானகிராமன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது கழுத்தை சுற்றி துண்டு இருந்தது. எனவே அவர் தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜானகிராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜானகிராமனின் திடீர் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. தேர்தல் போட்டியில் அவர் மிரட்டப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் தலைமையில் ஏராளமான கட்சியினர் திரண்டனர்.

திடீரென அவர்கள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வேட்பாளர் ஜானகிராமனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜானகிராமன் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும் விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையம் முன்பு சுமார் 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஜானகிராமன் அ.தி.மு.க.வின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இதனால் அவருக்கு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜானகிராமன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். அரசியல் போட்டியில் யாரேனும் அவருக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஜானகிராமன் பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அதனை வைத்து அவர் கடைசியாக யார்? யாரிடம் பேசினார் என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர். கடைசியாக அவரை தொடர்பு கொண்ட நபர்களின் விவரத்தை சேகரித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னரே ஜானகிராமன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவரும்.

தலைப்புச்செய்திகள்