Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்.19-ல் பொது விடுமுறை

பிப்ரவரி 09, 2022 11:12

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் விதிமுறையை பின்பற்றாமல் இருந்ததால், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆகியோரின் அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் 33 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்து 12 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மட்டும் பொதுவிடுமுறைக்கு பொருந்தாது என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்