Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக துதிபாடிகளுக்கு விருது அறிவித்துள்ளார் ஸ்டாலின்; பாஜக விமர்சனம்

ஜனவரி 31, 2022 10:45

கோவை: ''தமிழை அழித்து ஒழிக்கவே தி.மு.க., தமிழ் வளர்ச்சித் துறையை செயல்படுத்தி வருகிறது.'' என, தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் பா.ஜ.மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் வளர்ச்சித்துறை தமிழை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட துறை. ஆனால் தமிழை அழித்து ஒழிக்கவே தி.மு.க., தமிழ் வளர்ச்சித் துறையை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஒரு சான்றுதான் இந்த முறை தமிழக வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள்.துதி பாடிகளுக்கு விருது வழங்கி, உண்மையான தமிழ் அறிஞர்களை அவமதித்துள்ளது இந்த அரசு.

அண்ணா துரை விருது நஞ்சில் சம்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேடையில் நாக்கூச பேசும் நாகரிகமற்ற பேச்சாளர் அவர். தி.மு.க., தலைவர் குடும்பத்தை வாயில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டி வசைபாடியவர். முதல்வர் ஸ்டாலினை 'ஞான சூனியம்' என்று பேசியவர். இப்போது அவரை 'இந்திரன், சந்திரன்' என்று புகழ்கிறார்.

அடுத்து, சூரியா சேவியர் என்பவருக்கு 'சொல்லின் செல்வர்' விருது வழங்கப்பட்டுள்ளது. 'பிராமணர்களை தரக்குறைவாக திட்டி மேடையில் பேசிய இவருக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மாற்று மதத்தை தாஜா செய்ய, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள நெல்லை கண்ணனுக்கு. இளங்கோவடிகள் விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளனர்.கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி, 22.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறார். ஆனால், தமிழக அரசு ஆண்டுக்கு, 3.2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளது. 'தமிழ் வாழ்க' என்பது கோஷமாக மட்டுமே இருக்கிறது.

சட்டங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. ஹிந்தியை தமிழகத்துக்குள் விட முடியாது என வீராப்பு பேசும் இவர்கள், ஆங்கிலேயர் கால்டுவெல் போப்புக்கு சிலை வைத்து சாமரம் வீசுகின்றனர். தமிழை அழிக்கும் தி.மு.க.,வை உண்மையான தமிழர்கள் தண்டிப்பார்கள். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்