Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி?: பாஜக ஆலோசனை

ஜனவரி 28, 2022 10:18

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., உடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று (ஜன.,28), மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து, கட்சியை பலப்படுத்த, மாவட்ட வாரியாக சென்று, கட்சியினரை சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறார். தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து, பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.இதனால், பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு வார்டிலும் பா.ஜ.,வுக்கு ஏற்கனவே இருந்த ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி தொடரும்பட்சத்தில், பா.ஜ.,வுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே கிடைக்கும். அதில் பா.ஜ., வெற்றி பெற்றாலும், மாநிலம் முழுதும் பா.ஜ., பெறும் ஓட்டு சதவீதம், மற்ற கட்சிகளுடன் குறைவாகவே இருக்கும்.

அதேசமயம், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் பா.ஜ., தனித்து போட்டியிட்டால், அதிக ஓட்டுக்கள் நிச்சயம் கிடைக்கும். தி.மு.க., -- அ.தி.மு.க.,வுக்கு அடுத்து, பா.ஜ., மூன்றாவது பெரிய கட்சி என்பது, உறுதி செய்யப்படும். எனவே, தனித்து போட்டியிடுவது தொடர்பாக, சமீபத்தில் அண்ணாமலை தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற, மாநில மைய குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்