Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அவதுாறு பிரசாரம் செய்வதை திமுக கைவிடவேண்டும்: வானதி சீனிவாசன்

ஜனவரி 20, 2022 10:27

கோவை: 'குடியரசு தின அணிவகுப்பில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாதது குறித்து தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் வேண்டுமென்றே அவதுாறு பிரசாரம் செய்வதை கைவிடவேண்டும்' என, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.

வானதி வெளியிட்டுள்ள அறிக்கை:மாநில அரசுகள் தங்கள்சாதனைகளையும், பெருமைகளையும் குடியரசு தின அணி வகுப்பில் அலங்காரஊர்திகள் வாயிலாக வெளிப்படுத்த விரும்புவது நியாயம்தான். ஆனால், அதற்காக, 50க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகளை அணிவகுப்பில் இடம்பெறசெய்வது சாத்தியமில்லை.

கொரோனா கட்டுப்பாடு இருப்பதை கருத்தில்கொண்டு, இந்தாண்டு அலங்கார ஊர்திகளின் எண்ணிக்கையை, 12 ஆக குறைத்துள்ளனர். அதனால் பல மாநில அரசுகளின் ஊர்திகள் இடம்பெறவில்லை. இதை தேர்வு செய்வதில், அரசியல் தலையீடு எதுவும் இல்லை.

இது தொடர்பாக பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர், தமிழக முதல்வருக்கு விளக்க கடிதம் அனுப்பி உள்ளனர். அதை ஏற்காமல், மத்திய பா.ஜ., அரசுக்கு எதிரான அவதுாறு பிரசாரத்தை தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் செய்து வருகின்றன.

இதை தி.மு.க., கைவிட வேண்டும்.குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்காத தமிழக அரசின் அலங்கார ஊர்தி, சென்னையில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டுகள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்