Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்லையில் நிலையை மாற்ற எந்த நாட்டையும் இந்தியா அனுமதிக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை

ஜனவரி 16, 2022 10:31

புதுடெல்லி: எல்லையில் இப்போது உள்ள நிலையை மாற்றி அமைக்க இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது,'' என, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ராணுவ தலைமை தளபதி நரவானே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் கரியப்பா 1949 ஜன., 15ல் பதவியேற்றார். இந்த நாள் தேசிய ராணுவ தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நேற்று ராணுவ தலைமை தளபதி நரவானே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுத்ரி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.இதன்பின் நடந்த ராணுவ அணிவகுப்பு மரியாதையை ராணுவ தளபதி ஏற்று கொண்டார். தொடர்ந்து வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சீனா ஏற்படுத்திய பதற்றம் காரணமாக கடந்த ஆண்டு ராணுவத்திற்கு மிகப்பெரிய சவாலான ஆண்டாக அமைந்தது. நிலைமையை கட்டுக்குள் வைக்க சமீபத்தில் பேச்சு நடந்தது. சில இடங்களில் படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட எல்லையில் சூழ்நிலை மேம்பட்டுள்ளது.எல்லையில் இப்போதுள்ள நிலையை மாற்ற, எந்த நாட்டையும் இந்தியா அனுமதிக்காது. அதே நேரத்தில் எந்த நாட்டின் பகுதியையும் இந்தியா ஒரு போதும் ஆக்கிரமிக்காது. நம் எல்லையை பாதுகாப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க நமக்கு உரிமை உள்ளது. எல்லை அருகே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. 300 - 400 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதால் அவர்களால் ஊடுருவ முடியவில்லை.

ராணுவத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களால் மிகப்பெரிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துஉள்ளனர். புதிய சீருடை அறிமுகம்சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், கோடை மற்றும் குளிர்காலத்துக்கு ஏற்ற வகையிலும் இந்திய ராணுவத்தினருக்கு புதிய சீருடை வடிவமைக்கப் பட்டுள்ளது. தேசிய ராணுவ தினமான நேற்று ராணுவ வீரர்களுக்கான புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.

நேற்று நடந்த அணி வகுப்பில் பாரசூட் பிரிவு கமாண்டர்கள் புதிய சீருடையை அணிந்து பங்கேற்றனர். எல்லை பகுதிகளில் பணியாற்றம் ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டில்லியில் ராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு வெள்ளியன்றும் புதிய சீருடையை அணிந்து பணியாற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கு கடந்த ஆண்டு புதிய சீருடை அறிமுகப் படுத்தப்பட்டது.

தலைப்புச்செய்திகள்