Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது: எச்.ராஜா குற்றச்சாட்டு

ஜனவரி 09, 2022 11:09

சென்னை : ''கோவில் அறங்காவலர்கள் நியமனம் வெளிப்படை தன்மை இல்லாமல் நடக்கிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டினார்.

அவர் அளித்த பேட்டி:தி.மு.க., அரசு, ஹிந்து கோவில்களை முழுதும் சட்ட விரோதமாக அழித்து விடுவது என்று முனைப்பு காட்டி செயலாற்றி வருகிறது. இது, கண்டிக்கத்தக்கது. கோவில் நகைகளை உருக்குவது, கோவில் பணத்தில் கல்லுாரி கட்டுவது போன்றவற்றை அரசு அறிவித்தது.

ஆனால், அறங்காவலர் இல்லாமல் அவற்றை செய்யக்கூடாது என்று, நீதிமன்றம் தெரிவித்து விட்டது.தமிழக அரசு, எந்த கோவில்களிலும் நிதி இருக்க கூடாது என்று முனைப்பு காட்டி செயல்படுகிறது. கோவில் சொத்துக்கள்,நிலங்களை 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என்று, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு உதவி ஆணையர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் நிறுவ குறைந்த செலவே ஆகும்.ஆனால், இந்த பணிகளை கோவில் நிதியில் செய்யாமல், மீன் மார்க்கெட் கட்டுவது போன்ற பணிகள் வாயிலாக, ஹிந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது.கோவில் அறங்காவலர்கள் நியமனம் வெளிப்படை தன்மை இல்லாமல் நடக்கிறது.

அறங்காவலர் குழுவில் மகளிர், பட்டியல் இனத்தவர்கள் உள்ளிட்டோர் இருக்க வேண்டும். ஆனால், இந்த விபரங்கள் விண்ணப்பங்களில் இல்லை. விண்ணப்பங்களில் குறைபாடு இருந்ததை, அரசே நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.இதிலிருந்து, அறநிலையத் துறை ஆணையரும், அமைச்சரும் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.

'அறங்காவலர்களாக அரசியல் பின்னணி உடையவர்கள் இருக்கக் கூடாது. தெய்வ பக்தி உடையவர்கள் தான் இருக்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை அறங்காவலர் நியமனம் தொடர்பான சுற்றறிக்கை, விண்ணப்பங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

இது, திருட்டுத்தனமாக கரை வேட்டிக்காரர்களை அறங்காவலர்களாக நியமிப்பதற்கான முயற்சி.இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

தலைப்புச்செய்திகள்