Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு

ஜனவரி 07, 2022 11:18

நாகர்கோவில்: ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வார தொடக்கத்தில் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த கொரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்ணாக மாறியது. இன்று இரட்டை இலக்க எண்ணில் இருந்து மூன்று இலக்க எண்ணை எட்டி உள்ளது.

 குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடி மூலமாகவும் 3179 பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 55 ஆண்கள், 42 பெண்கள், 7 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகரிலும் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. வடசேரி, கோட்டார், நேசமணி நகர், இருளப்பபுரம் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாகர்கோவில் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கல்லூரியில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். பேராசிரியர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தொடர்பு கொண்டவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் நகரில் பாதிப்பு உள்ள பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் தூவும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடைவீதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ்நிலையம், மணிமேடை, செட்டிகுளம் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடைகள் மற்றும் வங்கிகளிலும் கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

குமரி மேற்கு மாவட்ட கோவில்களிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முஞ்சிறை யூனியனில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குருந்தன்கோடு யூனியனில் 13 பேரும், அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிள்ளியூரில் 5 பேருக்கும் மேல்புறத்தில் 3 பேருக்கும், ராஜாக்கமங்கலத்தில் 5 பேருக்கும், திருவட்டாரில் 4 பேருக்கும், தோவாளையில் 3 பேருக்கும், தக்கலையில் 8 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளும் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 888 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டதில் உள்ள 475 பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 49 ஆயிரத்து 27 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 11 லட்சத்து 82 ஆயிரத்து 619 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 8 லட்சத்து 73 ஆயிரத்து 96 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்