Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உயிருடன் திரும்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி: பிரதமர் மோடி கோபம்

ஜனவரி 05, 2022 05:49

சண்டிகர்: பஞ்சாபில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரதமரின் வாகனத்தை மறித்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர், மாநில அதிகாரிகளிடம், 'உயிருடன் திரும்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.' என வேதனையை வெளிப்படுத்திச் சென்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்து தற்போது ரத்து செய்துவிட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று பெரோஸ்பூரில் ஒரு பொதுக் கூட்டம் மற்றும் ஹுசைனிவாலாவில் தேசிய போர் நினைவிடத்திற்கு செல்ல இருந்தார். இதற்காக பதிந்தா விமான நிலையத்திற்கு வந்தவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பயணிக்க இருந்தார்.

மோசமான வானிலை காரணமாக 20 நிமிடங்கள் காத்திருந்தார். வானிலை சீரடையாததால் 100 கிலோ மீட்டரை சாலை மார்கமாக கடப்பது என முடிவு செய்யப்பட்டது. மாநில டி.ஜி.பி.,க்கு தகவல் அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னர் பிரதமரின் கான்வாய் புறப்பட்டது.

ஹுசைனிவாலாவுக்கு 30 கிலோ மீட்டர் முன்பாக மேம்பாலத்தில் வந்துக்கொண்டிருந்த பிரதமரின் கான்வாயை போராட்டக்காரர்கள் மறித்தனர்.

பிரதமரின் பாதுகாப்பில் மிகப்பெரிய குளறுபடியை ஏற்படுத்தியது. சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்திலேயே காத்திருந்த பிரதமர், நிலைமை சீரடையாததால் மீண்டும் விமான நிலையம் திரும்பினார். பெரோஸ்பூர் பொதுக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்த மாநில அரசு அதிகாரிகளிடம் பிரதமர், “இங்கு வரைக்குமாவது உயிருடன் திரும்பினேனே. அதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என கோபமாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

'காங்கிரஸ் அரசு கையாண்ட உத்திகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எவரையும் வேதனைப்படுத்தும்' என பா.ஜ.க., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்