Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒரே நாளில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

ஜனவரி 04, 2022 01:20

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 71 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 124 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,82,017 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் புதிதாக 37,379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக இருந்தது. அதன்பிறகு நாள்தோறும் பாதிப்பு அதிகரித்தது.

தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் பாதிப்பு உயர்ந்து 37 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கடந்த செப்டம்பர் 10-ந்தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 35 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு 115 நாட்களில் இல்லாத அளவில் அதிகபட்ச தினசரி பாதிப்பாக நேற்று அமைந்துள்ளது.

விடுமுறை நாளான நேற்று முன்தினம் நாடு முழுவதும் பரிசோதனைகள் 8.78 லட்சமாக குறைந்திருந்தது. இந்நிலையிலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்திருப்பது தொற்றின் பரவல் வேகம் அதிகமாக இருப்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.

நாட்டில் அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிராவில் புதிதாக 12,160 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் மும்பையில் மட்டும் 7,928 பேருக்கு தொற்று உறுதியானது.

டெல்லியில் ஒரேநாளில் பாதிப்பு 28 சதவீதம் உயர்ந்து 4,099 பேருக்கு தொற்று உறுதியானது.

மேற்குவங்கத்தில் 6,078 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது நேற்று முன்தின பாதிப்புடன் (6,153) சற்று குறைவு என்றாலும், அம்மாநிலத்தில் தொற்று பரவல் விகிதமானது 15.93-ல் இருந்து 19.59 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரத்து 261 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 71 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 124 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,82,017 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 11,007 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 414ஆக உயர்ந்தது.

தற்போதைய நிலவரப்படி 1,71,830 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை நேற்று முன்தினத்தை விட 26,248 அதிகமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 68.24 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் நேற்று மட்டும் 11,54,302 மாதிரிகள் அடங்கும்.

நாடு முழுவதும் நேற்று 99,27,797 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 146 கோடியே 70 லட்சத்தை கடந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்