Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகள் பிரச்சினை; பிரதமர் மோடி, அமித்ஷா ஆணவத்துடன் பேசினர்: மேகாலயா கவர்னர் பரபரப்பு தகவல்

ஜனவரி 03, 2022 03:44

புதுடெல்லி: அரியானா மாநிலம் தாத்ரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடியை நான் சமீபத்தில் சந்தித்தேன். 5 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன். அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்றேன்.

அதற்கு அவர் மிகுந்த ஆணவத்துடன் ‘அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்’ என்று கேட்டார்.

நான் அவரிடம் ஆமாம். நீங்கள் மன்னராக இருப்பதால் உங்களிடம் தெரிவித்தேன். அவருடன் நான் வாக்குவாதம் செய்தேன். அவர் உடனே நீங்கள் அமித்ஷாவை பாருங்கள் என்றார். நானும் அமித்ஷாவை பார்த்தேன். அமித்ஷாவோ ஒரு நாய் இறந்தாலும் கூட பிரதமர் இரங்கல் கடிதத்தை அனுப்புகிறார் என்று கூறினார்.

அவர்களின் பேச்சு குறித்து இவ்வாறாக சத்யபால் மாலிக் குறிப்பிட்டார்.

மேகாலயா கவர்னரின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சனங்களை முன்வைத்தது. பிரதமரின் தற்பெருமை, கொடூர சிந்தனை மற்றும் உணர்வற்ற போக்கை இது காட்டுவதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் பேச்சு அடங்கிய வீடியோவை காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சத்யபால் மாலிக் காஷ்மீர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். பின்னர் கோவாவுக்கு மாற்றப்பட்டார். தற்போது மேகாலயா கவர்னராக இருக்கிறார்.

தலைப்புச்செய்திகள்