Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குளச்சல் கடலில் போதையில் தவறிவிழுந்து தொழிலாளி பலி

டிசம்பர் 25, 2021 02:34

குளச்சல்: குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் மரியஜாண் (வயது 55). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது படகில் புதுக்கோட்டை அறந்தாங்கி எழில்நகரை சேர்ந்த முத்து (19) மற்றும் நரேஷ் ஆகியோர் மீன் பிடித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மரிய ஜாண் படகு கடந்த 21-ந் தேதி கரை திரும்பியது. மீன்களை இறக்கி விற்று விட்டு படகு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. படகில் முத்து, நரேஷ் இருவரும் தங்கியிருந்தனர். இந்நிலையில் முத்து 23-ந்தேதி ஒரு வள்ளத்தில் கரைக்கு வந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் முத்து மீண்டும் படகிற்கு ஒருவரது வள்ளத்தில் சென்றார்.

வள்ளத்தில் முத்துவை ஏற்றிக் கொண்டு சென்ற வள்ளம் மீனவர் முத்துவை விசைப்படகில் ஏற்றிவிட்டு கரை திரும்பியது. வள்ளம் கரை திரும்பிய சிறிது நேரத்தில் முத்து படகிலிருந்து தவறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை படகிலிருந்த நரேஷ் கவனிக்கவில்லை.மறுநாள் முத்துவை காணவில்லை என்று நரேஷ் படகு உரிமையாளர் மரிய ஜாணுக்கு தகவல் தெரிவித்தார்.

மீனவர்கள் முத்துவை தேடி வந்த நிலையில் முத்துவின் உடல் படகுகளுக்கு இடையே மிதந்து வந்தது.இது குறித்து மரிய ஜாண் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.மரைன் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த மரைன் போலீசார் மீன்பிடித் தொழிலாளி முத்து கடலில் தவறி விழுந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்