Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வளர்ப்பு நாய் மாயமானதால் சிமெண்டு லாரிகளை சிறைப்பிடித்த உரிமையாளர்

டிசம்பர் 16, 2021 10:03

செந்துறை: அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் தனியார் மற்றும் அரசு சிமெண்டு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகளில் சிமெண்டு மூட்டைகள் பல்வேறு கிராமங்களை கடந்து வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதேபோல் அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்குள்ள ஆலை குடியிருப்புக்கு எதிரே ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பைகி என்ற நாட்டு நாயை செல்லமாக வளர்ந்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக அந்த செல்ல நாயை காணவில்லை. ராஜகோபால் தனது வளர்ப்பு நாய் ஸ்பைகி எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தியில் இருந்தார். இதற்கிடையே தனியார் சிமெண்டு ஆலை நிர்வாகத்தின் சார்பில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஏராளமான நாய்களை பிடித்தது தெரியவந்தது.

இதுபற்றி அங்கிருந்த ஆலை காவலாளியிடம் கேட்டபோது, அது இந்த நேரம் உயிருடன் இருக்கிறதா தெரியவில்லை என்று அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனை கேட்டு ஆத்திரமடைந்த உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் சிமெண்டு ஆலையில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வெளியே சென்ற 20-க்கும் மேற்பட்ட லாரிகளை நள்ளிரவில் சிறைப்பிடித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜகோபால் போலீசாரிடம், தங்களுக்கு வளர்ப்பு நாய் வேண்டும், அல்லது ஆலை நிர்வாகத்தினர் நாயை பிடித்து எந்த இடத்தில் விட்டார்கள் என்று கூறினால் நாங்கள் சென்று மீட்டுக்கொள்கிறோம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளித்த ஆலை நிர்வாகம் காலையில் பேசிவிட்டு கூறுகிறோம் என பதில் அளித்தால் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

நள்ளிரவில் நாய்க்காக சாலை மறியலில் ஈடுபட்டது போலீசார் மற்றும் லாரி ஒட்டுனர்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்