Thursday, 9th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

நவம்பர் 29, 2021 12:43

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.30) உருவாக வாய்ப்புள்ளது. குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 29-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

இதர கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மாநகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 10 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இலங்கை அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 29-ம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

வரும் 30-ம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் தாக்கத்தால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியமாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.29) விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்