Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திராவிட கட்சிகளின் ஆட்சியில் 10 ஆயிரத்து 800 நீர்நிலைகள் மாயமாகி உள்ளன: எச்.ராஜா குற்றச்சாட்டு

நவம்பர் 27, 2021 11:00

தர்மபுரி: தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக நடந்து வரும் திமுக ஆட்சி, மக்கள் பணியைப் பொறுத்தவரை தோல்வி அடைந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார்.

தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி  மூன்று நாட்கள் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேச, கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தருமபுரி வந்தார்.

நிகழ்ச்சிக்கு இடையே பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

''சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 25 நாட்களாகத் தொடர் மழை காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், தற்போது ஆட்சியில் உள்ளபோது ஒரு ஹெக்டேருக்கே ரூ.20,000 அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீதிமன்றம் உள்ளிட்ட அரசுக் கட்டிடங்களே நீர்வழிப் பாதைகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. அரசியல், பொதுவாழ்வு, தனிமனித நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்திலுமே ஒழுக்கம் தேவை. கடந்த 54 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 800 நீர்நிலைகள் மாயமாகி உள்ளன. தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த ஒழுக்க நெறிமுறைகளை வகுக்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டாமல் இவ்வாறு நெறிமுறைகளை வகுக்க முடியாது.

தமிழகத்தில் கடந்த ஆறு மாத கால திமுக ஆட்சி, மக்கள் பணியைப் பொரறுத்தவரை தோல்வி அடைந்துள்ளது. சென்னையில் நீர் கட்டமைப்புகள் மேம்படுத்துவது, பழுது பார்ப்பது போன்ற பணிகளுக்கு ஆறு மாதம் போதுமானது. இதைச் செய்யாததன் விளைவே சமீபத்திய மழையில் சென்னை நகரம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கக் காரணம்.

'ஜெய் பீம்' திரைப்படம் திட்டமிட்டு இந்துக்களுக்குள் மோதலை உருவாக்கி மத மாற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தயாரிக்கபட்ட படமாகும். இந்த நோக்கம் எப்படிப்பட்டதென்று தொடர்ந்து இந்து மக்களிடையே கொண்டுசேர்க்கும் பணியில் பாஜகவினர் ஈடுபடுவோம்''.

இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்