Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டில் பல கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நவம்பர் 26, 2021 12:27

புதுடெல்லி: அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.

அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளன.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின தொகுப்பு மட்டுமல்ல பெரும் பாரம்பரியம். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாள்தான் எதிரிகள் இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்திய துக்க தினம்.  26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

நாட்டில் பல கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன. குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். நம்மை நாமே ஆளவேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார். 

நமது உரிமைகளை பாதுகாக்க கடமை என்கிற பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம். அரசியலமைப்புச் சட்டம்  உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவேண்டும். அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேணடும். ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்