Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு

நவம்பர் 01, 2021 12:09

மதுரை: சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்விஎழுப்பியதுடன் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்.பி.சி., பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில் எம்.பி.சி., பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் அ.தி.மு.க., முதல்வராக பழனிசாமி இருந்தபோது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க., அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.

இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், எம்.பி.சி., பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 25 மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் இருந்தன.

இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: முறையாக தரவுகள் இல்லாமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டா, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இதற்கெல்லாம் அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. ஆகவே, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவித்தனர்.

அதேபோல், தற்போது வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆகையால் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்