Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐ.ஐ.டி வளாகத்தில் 45 நாய்கள் உயிரிழப்பு ; மா. சுப்ரமணியன் நேரில் ஆய்வு

அக்டோபர் 17, 2021 05:34

சென்னை; சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி 617 ஏக்கர் பரப்பளவு நிலப்பரப்பில் இந்திய அளவில் தொழிற்கல்வி நிறுவனங்களில் முதன்மையானதாக விளங்கி வருகிறது.

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதக் கணக்கெடுப்பின்படி 188 நாய்கள் இந்த வளாகத்தில் இருந்துள்ளன.

தன்னார்வலர்களால் வளர்த்து பாதுகாக்கிற பணியை ஐஐடி நிர்வாகம் ஏற்று, கண்காணிக்கிற பணியை ஒரு குழு அமைத்து மாதந்தோறும் கவனித்து வருகிறது.

இந்த வளாகத்தில் 10,600 சதுர அடியில் இரண்டு கொட்டகை அமைத்து 9 நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு, செல்லப்பிராணிகளுக்குத் தேவையான உணவு, அவற்றைப் பராமரிக்கிற பணிகளைச் செய்து வருகின்றனர்.

கடந்த ஓர் ஆண்டில் 56 நாய்கள் இறந்துள்ளன. வெளியில் இருந்து வளர்க்கக் கேட்டவர்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான பட்டியலைக் கேட்டிருக்கிறோம்.

56 நாய்கள் இறப்புக்கான காரணம் என்னவென்று கேட்டபோது, உடல் நோய் காரணமாகவும், முதுமை நிலையிலும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் ஒரு நாயின் உடல் மட்டும் உடற்கூராய்வுக்கு கேட்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடற்கூராய்வு முடிவு வந்தபிறகு, நாய்கள் இறந்ததற்கான உண்மைத்தன்மை தெரியவரும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்