Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறையில் இருந்து விடுதலையானார் சுதாகரன்

அக்டோபர் 16, 2021 01:24

பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி சரண் அடைந்து தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்ததும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தினர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் திட்டமிட்டப்படி கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

 

சசிகலா


அந்த நேரத்தில் அவர்கள் 2 பேரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். விடுதலை நாள் அப்போது வந்ததை அடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்தும், சுதாகரன் மட்டும் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகையை செலுத்தவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவுப்படி அவர் அபராதத் தொகையை செலுத்த தவறியதால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்தார்.

இந்த நிலையில் சுதாகரன் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்ததையொட்டி அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார்.

அபராதம் செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில் சுதாகரன் 89 நாட்களுக்கு முன்னதாகவே விடுதலையானார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சிறையில் இருக்கவேண்டிய நிலையில் 89 நாட்கள் முன்னதாகவே விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்