Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 98 சதவீதமாக உயர்வு: தினசரி பாதிப்பு குறைந்தது

அக்டோபர் 12, 2021 12:16

இந்தியாவில் கரோனாவிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 98 சதவீதத்தை எட்டியுள்ளனர்.

கடந்த 224 நாட்களில் இல்லாத அளவு தினசரி தொற்று 14 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 900 ஆகக் குறைந்துவிட்டது. கடந்த 224 நாட்களில் இல்லாத அளவுக்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 447 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 57 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 0.63 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் மிகக் குறைவாகும். தொடர்ந்து 18-வது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 81 ஆயிரத்து 76 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 58 கோடியே 50 லட்சத்து 38 ஆயிரத்து 43 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 181 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50 ஆயிரத்து 963 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 95.89 கோடியைக் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்