Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தலிபான்களின் அரசை சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் - இம்ரான்கான் வலியுறுத்தல்

செப்டம்பர் 26, 2021 09:58

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டு அரசுடன் சண்டையிட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள், அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ம் தேதி நாட்டை முழுமையாக கைப்பற்றினர். அதனை தொடர்ந்து, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர்.  தலிபான்களின் இந்த புதிய அரசை உலக நாடுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஐ.நா.வும் தலிபான்களின் அரசை அங்கீகரிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.

அதேசமயம், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது முதலே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அதோடு தலிபான்களின் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் பாகிஸ்தானுக்கு பெரும் பங்கு இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதனை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா, பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், இப்போது அனைத்து சர்வதேச சமூகமும் முன்னோக்கிச் செல்லும் வழி என்ன என்று சிந்திக்க வேண்டும். நாம் செல்லக்கூடிய 2 பாதைகள் உள்ளன. நாம் இப்போது ஆப்கானிஸ்தானை புறக்கணித்தால் அது அந்நாட்டு மக்களுக்கு பாதகமாக அமையும். ஐ.நா. அறிக்கையின்படி பாதி ஆப்கானிஸ்தான் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர், அடுத்த ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் செல்வார்கள். ஒரு மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி நம் முன்னால் உள்ளது. இது ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சர்வதேச சமூகம் தலிபான்களின் அரசை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்