Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீக்காய உயிரிழப்பை தடுக்க மதுரையில், தென் மாவட்டங்களில் முதல்முறையாக தோல் வங்கி

செப்டம்பர் 23, 2021 11:40

மதுரை: தீக்காயத்தால் பாதிக்கப்படுவோருக்கு தோல் மாற்று சிகிச்சை அளிக்க வசதியாக மதுரை கிரேஸ் கென்னட் மருத்துவமனையில் தோல் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் தீக்காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் காயமடைவோர் மரணமடைவதைத் தவிர்க்க தோல் மாற்று சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் 10 தோல் வங்கிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் கோவை, சென்னையில் மட்டுமே தோல் வங்கிகள் உள்ளன. இந்நிலையில் தென் மாவட்டங் களில் முதல் முறையாக மதுரை கிரேஸ் கென்னட் மருத்துவமனையில் தோல் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.மூளைச்சாவு மற்றும் முன்பதிவு கொடையாளர்கள் மூலம் தோல் தானம் பெற்று பதப்படுத்தி, பாதிக்கப்படு வோருக்கு உதவும் நோக்கில் தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளதாக இம் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக மருத்துவ அலுவலர் அகஸ்டஸ் சாமுவேல் டாட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: தோல் இழப்பால் உயிரிழப்பு ஏற்படுகிறது. தீக்காயத்தின் போது முதல் 3 வாரங்களுக்குள் வழங்கப்படும் தோல் மூலம், உயிரிழப்பை 50 சதவீதம் குறைக்கலாம். தகுதி வாய்ந்த இறந்த நன்கொடையாளர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தோல் சர்வதேச நெறிமுறைப்படி பயன்படுத்தப்படும். 4 - 8 டிகிரி செல்சியஸில் 5 ஆண்டு வரை தோலை சேமித்து பிறருக்கு பயன்படுத் தலாம். கண் தானம் போல் இறந்த 6 மணி நேரத்துக்குள் தோல் தானம் செய்யலாம். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், எந்த ரத்தப் பிரிவினரும் தானம் செய்யலாம்.

ரூ.1கோடி செலவில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் இறந்த 35 வயது இளைஞரிடம் இருந்து தோல் தானம் பெற்றுள்ளோம். மதுரையைச் சேர்ந்த மருத்துவர் உள்ளிட்ட சில முக்கிய நபர்களும் தோல் தானத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர். பிற உடல் உறுப்பு தானங்களை போன்று, தோல் தானமும் அவசியம். ஒருவரிடமிருந்து எடுக்கும் தோல் 40 நாள் முதல் 5 ஆண்டு வரை பயன்படுத்தலாம். சேவையை மையமாகக் கொண்டு இந்த வங்கி தொடங்கினாலும், 2 சதுர செ.மீ. அளவுக்கு ரூ. 20 வரை அதுவும் பதப்படுத்தும் செலவுக்கு மட்டுமே அத்தொகையை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளோம். வெடி விபத்துகளில் சிக்கும் தொழிலாளர்கள், தீ விபத்தில் பாதிக்கப்படுவோரை காப்பாற்ற இந்த தோல் வங்கி பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்