Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது

செப்டம்பர் 15, 2021 04:30

சென்னை: தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 13 பேர் 200-க்கு 200 மார்க் பெற்று இருந்தனர்.
 
தமிழகத்தில் மொத்தம் 440 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் உள்ளன. இதில் சேருவதற்காக விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 43 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்தபடி ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

இத்துடன் கம்ப்யூட்டர் மையங்கள் மூலமும், வீட்டில் இருந்தபடியும் சில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். இன்றைய கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் இட ஒதுக்கீடு மாணவ-மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோர் இந்த சிறப்பு குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று தர வரிசைப்பட்டியலின் அடிப்படையில் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற 24-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். அதன் பிறகு வருகிற 27-ந் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்த மாதம் 17-ந் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும். பின்னர் அடுத்த மாதம் 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும். அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் முதல்கட்ட கலந்தாய்வு முடிக்கப்பட இருக்கிறது.

அனைத்து இடங்களையும் நிரப்பும் வகையில் இந்த முறை 5 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. உரிய இடங்கள் நிரம்பும் வரை கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட அரசு கல்லூரி இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 18-ந் தேதி வழங்க உள்ளார்.

தலைப்புச்செய்திகள்