Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

செப்டம்பர் 01, 2021 04:13

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. பாதுகாப்பு கருதி அணையில் 102 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்ததால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தொடர்ந்து அணை நீர்மட்டம் 100 அடியிலேயே இருந்து வந்தது. நீலகிரி மலைப்பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்ததால் கடந்த சில தினங்களுக்கு முன் பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது.

அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 102 அடியில் நீடித்து வருகிறது. நேற்று அணைக்கு 2,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1028 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 440 கன அடியும் என மொத்தம் 940 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்