Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பாஜக தயார்; தமிழ்நாடு தயாரா?- அண்ணாமலை கேள்வி

ஆகஸ்டு 14, 2021 06:03

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவையில் இன்று (ஆக.14) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரும் 16,17,18-ம் தேதிகளில் 'மக்கள் ஆசி யாத்திரை' மேற்கொள்ள உள்ளார். முதல் நாளில் கோவை மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகின்றன. எந்த ஒரு ஆட்சிக்கும் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த ஆட்சியில் தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மாவட்ட அளவில் நல்ல ஆட்சியாளர்களைப் பொறுப்புகளில் நியமித்துள்ளனர். அதிகாரிகள் திறம்பட வேலை செய்கின்றனர்.

கரோனா இரண்டாவது அலையை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கட்டுப்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'மத்திய அரசு இங்கு ராணுவத் தளவாட உதிரிபாகங்கள் தயாரிப்பு மையம் அமைத்த பிறகு தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரதமர் மோடி அதைத் திறந்துவைக்க வந்தபோது கருப்புச் சட்டை அணிந்து, பலூன்களைப் பறக்கவிட்டு பிரதமர் திரும்பச் செல்ல வேண்டும் எனத் திமுகவினர் வலியுறுத்தினர்.

அதே கட்சியினர் ஆட்சிக்கு வந்தபிறகு, அவர்களின் மனநிலையை மாற்றி, முதலீடு வந்துள்ளதை ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் இவ்வாறு இணக்கமாகச் செல்லச் செல்ல மத்திய அரசின் முழு பயனும் மக்களைச் சென்றடையும். தமிழக அரசின் பெட்ரோல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு மக்களுக்கு பயன் அளிக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பாஜக தயாராக உள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சராக தர்மேந்திரபிரதான் இருந்தபோது இதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் எனில் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒத்துழைப்பு வேண்டும். ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவரும்போது மாநிலத்துக்கு அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை வரும் 2022 வரையே மத்திய அரசு அளிக்கும். ஏற்கெனவே, தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை, நிதிச்சுமை என்று தெரிவித்து வருகின்றனர். ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவந்தால் பெட்ரோல் விலை நிச்சயம் குறையும்.

ஆனால், மாநில அரசுக்கு இதன்மூலம் வருவாய் இழப்பு ஏற்படும். மாநில அரசும், நிதியமைச்சரும் இதற்குத் தயாரா? ஏனெனில், மாநில அரசுதான் இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சோதனை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யட்டும். பிறகு, அதுதொடர்பாக பதில் சொல்கிறேன்’’.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்