Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய கட்டுப்பாடுகளால் களை இழந்த ஏற்காடு, மேட்டூர்

ஆகஸ்டு 14, 2021 05:04

சேலம்: தமிழகத்தில் கொரோனா 2-வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் 3-வது அலை பரவாமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதோடு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா முதல் அலை தொடங்கிய நாளில் இருந்தே பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்தன.

பிறகு ஓரளவு மீண்டு வந்த நிலையில் 2-வது அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்திவிட்டன. 2-வது அலை தொடங்கிய ஏப்ரல், மே மாதங்களிலேயே மீண்டும் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்க தொடங்கிவிட்டது. பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் சுற்றுலா தொழிலையும் கொரோனா புரட்டிபோட்டுவிட்டது.

கொரோனா ஊரடங்கால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் களை இழந்து காணப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்றவை சிறப்பு வாய்ந்தவை. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து இந்த சுற்றுலா தலங்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் களை கட்ட தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இவை வெறிச்சோடி காணப்படுகின்றன.

சுற்றுலா தலங்கள் மூலம் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலா தலங்களை நம்பி பிழைப்பு நடத்தும் ஓட்டல், ரெஸ்டாரண்ட், சுற்றுலா வேன்கள், ஆட்டோக்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், விடுதி நடத்துவோரும் கடும் பாதிப்புக்குளாகி இருக்கிறார்கள்.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு செல்ல கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்று வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேவேளையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டு உள்ளது. பூலாம் பட்டியிலும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா தலங்கள் முழுமையாக களை இழந்து காட்சி அளிக்கின்றன. ஏற்கனவே ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பூங்கால் செல்லும் சாலைகள், பூங்கா பகுதிகள் புற்கள் புதர் போல காணப்படுகின்றன.

பொதுவாக ஏற்காட்டுக்கு பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். அவர்கள் ஏற்காடு மட்டுமின்றி சேலத்திலும் விடுதிகளில் தங்குவது வழக்கம். பின்பு கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் ஏற்காடு, மேட்டூருக்கு செல்வார்கள்.
இவர்களிடம் நாள் கணக்கில் வாடகை வசூலித்து வாடகை வாகன டிரைவர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் ஏற்காடு முற்றிலும் களை இழந்து விட்டது. ஏற்காட்டுக்கு தனியார் பஸ்கள் கூட முறையாக இயங்கவில்லை. அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றுலா தலங்களை முன்பு போல செயல்பட செய்யவேண்டும் என்கின்றனர் மக்கள். கொரோனா விதிமுறைகளை அமல்படுத்துவதோடு சில எளிமையான கட்டுப்பாடுகள் மூலம், சுற்றுலா தலங்களை செயல்பட செய்ய வேண்டும் என சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

தலைப்புச்செய்திகள்