Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதலில் நான் கன்னடம், பிறகுதான் இந்தியர்: பாஜகவுக்கு குமாரசாமி பதிலடி

ஆகஸ்டு 13, 2021 06:20

மேகதாது அணைத் திட்டம் எங்கள் உரிமை, மாநிலம் என்று வரும்போது நான் முதலி்ல் கன்னடமாநிலத்தவர் அதன்பின்புதான் இந்தியர் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி தெரிவித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு ரூ. 9 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கர்நாடக அரசின் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளது. மேலும் மேகேதாட்டு திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது. ஆனால், மேகேதாட்டு அணைத் திட்டம் செயல்படுத்துவது உறுதி அதில் மாற்றமில்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்டி குமாரசாமி நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

தண்ணீரை வைத்துக் கொண்டும், மக்களின் உணர்ச்சிகளின் மீதும் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், எங்கள் மாநிலப்பிரசினையாக மாறும்போது, நான் முதலில் கன்னட மாநிலத்தைச் சேர்ந்தவன், அதன்பின்தான் இந்தியன். எனக்கு என்னுடைய மாநிலம்தான் முக்கியம். தேசியவாதம் என்ற பெயரில் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. பாஜக தலைவர் சிடிரவி இந்தியராக முதலில் இருக்கட்டும். மேகதாது அணைத் திட்டம் என்பது எங்களின் உரிமை. அந்த அணைத் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்போம்” எனத் தெரிவித்தார்

முன்னதாக பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி பேசுகையில் “ உணர்ச்சிகள் அடிப்படையில் செயல்படாமல், தேசம் முக்கியம் என்று செயல்படுங்கள். முதலில் இந்தியாவுக்கு நான் ஆதரவாக இருப்பேன், குடிக்கும் தண்ணீரை உணர்வுப்பூர்வமாகப் பார்க்கக் கூடாது. தண்ணீர் என்பது, அரசியலில் பெரும்மோதலாகிவிடக்கூடாது. இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

பாஜக தலைவர் சிடி.ரவியின் கருத்து கர்நாடக பாஜகவிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக ஆலோசிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேகதாது அணைக் கட்டுவது தொடர்பாக கர்நாடக, தமிழக பாஜக இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, சூடான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்