Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்மா உணவகத்துக்கு வழங்கிய காய்கறிக்கு ரூ.6 லட்சம் பாக்கி வைத்துள்ள தாம்பரம் நகராட்சி நிர்வாகம்

ஆகஸ்டு 11, 2021 12:25

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் பசுமை பண்ணை காய்கறி கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடையில் இருந்து தாம்பரம் நகராட்சியில் செயல்படும் 2 அம்மா உணவகங்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தாம்பரம் நகராட்சி நிர்வாகம், காய்கறி வாங்கியதற்கான கட்டணத்தை பசுமை பண்ணை காய்கறி கடைகளுக்கு சரிவர செலுத்தாததால் காய்கறி வழங்குவது நிறுத்தப் பட்டது.

பசுமை பண்ணை காய்கறி கடைகள் மூலம் அம்மா உணவகத்துக்கு காய்கறி விற்பனை செய்ததில் தாம்பரம் நகராட்சி ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 734 பாக்கி வைத்துள்ளது. இந்த பாக்கியை கேட்டு தாம்பரம் நகராட்சிக்கு பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் இதுவரை பாக்கி தொகையை செலுத்தவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தாம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தாம்பரம் நகராட்சியில் உள்ள 2 அம்மா உணவகங்களுக்கும் சேர்த்து காய்கறிக்காக மாதத்துக்கு ரூ.30,000 செலவாகிறது. ஆனால் பசுமைப் பண்ணை கடைகள் மூலம் தேவைக்கு அதிகமாக சப்ளை செய்து, எங்களிடம் பணம் வசூலிக்க முயல்கின்றனர்’’ என்றனர்.

நகராட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பசுமை பண்ணை காய்கறி ஊழியர்கள். ‘‘நாங்கள்கொடுத்த அனைத்து காய்கறிகளை யும் நகராட்சியினர் வாங்கிக் கொண்டனர். அதிகமாக இருந்தால் திருப்பித் தந்திருக்கலாம்; ஆனால் தரவில்லை. காய்கறி விற்பனையில் அவர்கள் தவறுகளை மறைத்து எங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதனால்அரசு தலையிட்டு பண்டக சாலைக்கு வரவேண்டிய பாக்கிதொகையை பெற்றுத்தர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்