Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் - இன்று அமலுக்கு வந்தது

ஆகஸ்டு 09, 2021 04:17

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது அவ்வப்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 6-ந்தேதி கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் 2 வா ரங்கள் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இன்று காலை 6 மணி முதல் வருகிற 23-ந்தேதி காலை 6 மணி வரை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்து இருந்தார்.
இதன்படி புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது. வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதன் மூலம் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 13, 14, 15 மற்றும் 20, 21, 22 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், மசூதிகள் ஆகியவற்றுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்காக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களிலும் இதனை முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக மக்கள் கூடுவது வழக்கம். தமிழக அரசின் தடை காரணமாக தங்களது வேண்டுதலை மற்ற நாட்களில் பொதுமக்கள் செய்து வருகிறார்கள். இதனால் திங்கள் முதல் வியாழன் வரை தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மக்கள் கூட தொடங்கி உள்ளனர்.

இந்த நாட்களில் மொட்டை போடுதல் உள்ளிட்ட வேண்டுதல்களையும் நிறைவேற்றி வருகிறார்கள். இறைச்சி மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க திறந்த வெளியில் தனித்தனி கடைகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி காசிமேடு மீன் மார்க்கெட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்காக சானிடைசர் வைத்திருக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகு வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க வேண்டும். 

முகக்கவசம் அணியாதவர்களை கண்டிப்பாக அனுமதிக்ககூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை கடை உரிமையாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இதுபோன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்