Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசியை சேர்ந்த வங்கி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

ஆகஸ்டு 08, 2021 10:56

நீடாமங்கலம்: தென்காசியை சேர்ந்த வங்கி அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் மேலகரம் விவேகானந்தர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் பிரதீப் சண்முகம் (வயது 28). இவர், நீடாமங்கலம் மேலராஜவீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

திருமணம் ஆகாத இவர், நீடாமங்கலம் வடக்கு வீதியில் உள்ள ஒரு குடியிருப்பில் மாடி தளத்தில் குடியிருந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் தனது பணிகளை கவனித்து வந்த பிரதீப் சண்முகம் குடியிருப்பின் கீழ்தளத்தில் நின்று அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் குடியிருப்பின் மாடி தளத்திற்கு சென்று கதவை தாழிட்டு உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தாழ்ப்பாள் போட்ட கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய பிரதீப் சண்முகத்தின் உடலை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், பிரதீப் சண்முகத்திற்கு அவரது சம்மதத்துடன் வீட்டில் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்ததும், திருமண நிச்சயம் செய்யப்பட்டதற்காக சக ஊழியர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் இனிப்பு வழங்கியதும் தெரிய வந்தது. இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்கி உதவி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்