Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலகிருஷ்ண ரெட்டி சரணடைய விலக்கு அளித்தது சுப்ரீம் கோர்ட்

பிப்ரவரி 04, 2019 09:15

புதுடெல்லி: மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு-கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் கள்ளச் சாராய விற்பனையை எதிர்த்து போராட்டம் கடந்த 1998-ல் நடைபெற்றபோது, பேருந்துகள் மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. 
 
இந்த வழக்கில் 7-1-2019 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்குள் அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, பாலகிருஷ்ண ரெட்டி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்திருந்தார். 

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைய வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இருந்து விலக்கு அளித்து இன்று உத்தரவிட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்