Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை: ஜெயராஜ் மனைவி 3 மணி நேரம் சாட்சியம்

ஆகஸ்டு 05, 2021 12:02

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு கால நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் 2020-ல் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் கடுமையாகத் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் தர்,சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை ஆகியோர் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்தது. பின்னர் 9 பேரையும் கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி பத்மநாபன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தர் உள்ளிட்ட 9 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் சாட்சி விசாரணை நடந்தது. கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மனைவியும், வழக்கின் முக்கியச் சாட்சியுமான செல்வராணி தொடர்ந்து 3 மணி நேரம் சாட்சியளித்தார். அப்போது அவர் கண்ணீர் மல்க கூறுகையில், தனது கணவரும், மகனும் நல்ல உடல் நலத்துடன் இருந்தனர். சம்பவம் நடந்த அன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது அவர்களை நேரில் பார்த்தேன். பின்னர் இருவரையும் சடலமாகவே பார்த்தேன்.

எனது கணவர், மகனுக்கு போலீஸாருடன் எந்த முன்விரோதமும் கிடையாது. இருவரும் காவல் நிலையத்தில் இருப்பது உறவினர்கள் மூலமாகவே எங்களுக்குத் தெரியவந்தது. இரவில் பென்னிக்ஸ் வேறு ஒருவரின் செல்போனில் இருந்து என்னிடம் பேசினார். அப்போது இரவு முழுவதும் தன்னையும், அப்பாவையும் போலீஸார் அடித்ததாகக் கூறினார்.

அவனால் தொடர்ந்து பேச முடியாத நிலையில் அப்பாவிடம் போனை கொடுப்பதாகக் கூறினார். எனது கணவர் என்னிடம் பேசும்போது, ‘நடந்தது நடந்துவிட்டது, நீ வெள்ளாரன்விளையில் உள்ள உன் தம்பி வீட்டுக்குச் சென்றுவிடு’ என்றார். அதன் பிறகு அவரால் பேச முடியவில்லை என்றார். காவல் ஆய்வாளர் தர், தனக்காக வாதாட வழக்கறிஞர் வைக்க விரும்பவில்லை என்று கூறிய அவர், செல்வராணியிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலீஸாரில் பலர் சிறையில் முதல் வகுப்பு வசதி வழங்க உத்தரவிடுமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

அடுத்த விசாரணையை ஆக.11-க்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்று பென்னிக்ஸ் சகோதரி சாட்சியம் அளிக்கிறார். பின்னர் செல்வராணி செய்தியாளர்களிடம், நீதிமன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

தலைப்புச்செய்திகள்