Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசு அளித்த ஊக்கம் முக்கிய காரணமாக இருந்தது- பவானி தேவி பேட்டி

ஆகஸ்டு 05, 2021 09:50

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் வாள் சண்டையில் பங்கேற்ற வீராங்கனை பவானி தேவி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் அங்கு நிருபர்களுக்கு பவானி தேவி அளித்த பேட்டி வருமாறு:-

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நான் முதல் முறையாக பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளேன். வந்ததும் தன்னை வந்து சந்திப்பதற்கான அனுமதியை முதல்-அமைச்சர் வழங்கியிருந்தார். அவர் எனது விளையாட்டையும் பார்த்திருக்கிறார். நான் நன்றாக விளையாடியதாக என்னை பாராட்டினார். போட்டிக்கு போவதற்கு முன்பும் விளையாட்டு வீரர்களிடம் 2 முறை கலந்துரையாடினார். எங்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி தேவையான உதவிகளைச் செய்வதாகவும் நம்பிக்கை அளித்தார்.

இது எனக்கு முதல் ஒலிம்பிக் போட்டி மட்டுமல்ல, வாள் வீச்சில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தற்போதுதான் இந்தியா சென்றிருக்கிறது. எனவே இது இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், எனக்கும் பெருமை சேர்க்கும் போட்டியாக இருந்தது. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. இதற்கு எனது குடும்பத்தினர் நல்ல ஆதரவு அளித்திருந்தனர். எனக்காக எனது தாயார் மிகுந்த கஷ்டப்பட்டார். அதையும் முதல்-அமைச்சர் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.

என்னிடம் இருந்த வாளை நான் முதல்-அமைச்சருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்தியாவில் இருந்து சென்று ஒலிம்பிக் போட்டியில் முதலாவதாக பயன்படுத்திய வாள் என்பதால் அதை அவருக்கு பரிசாக அளித்தேன். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் விளையாட வேண்டும். அதற்கு இந்த வாள் தேவைப்படும் என்று கூறி அதை எனக்கே திருப்பி பரிசாக வழங்கிவிட்டார். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட அரசு உதவிகளைச் செய்யும் என்று கூறி நம்பிக்கை அளித்தார்.

நான் தற்போது மின்சாரத்துறையில் பணியாற்றுகிறேன். அதுபற்றி முதல்-அமைச்சர் விசாரித்தார். நான் இந்த அளவுக்கு முன்னேறி வருவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அளித்த ஊக்கம் முக்கிய காரணமாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக அதில் இருந்து வரும் உதவி நிதி எனக்கு உதவிகரமாக இருந்தது. அதனால் வெளிநாட்டுக்கு சென்று பயிற்சிபெற முடிந்தது. இன்னும் பல விருதுகளை தமிழகத்துக்கு சேர்ப்பேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் எனக்கு உதவிகளைச் செய்திருந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்