Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் பொது சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு

ஆகஸ்டு 04, 2021 12:56

தமிழகத்தில் பொது சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரித் தாக்கலான மனு தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் பகலவாடியைச் சேர்ந்த குருநாதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில்தான் சட்டத்தை அமல்படுத்தத் தனித்துறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் பொதுமக்கள் பொது சேவை பெற கால உச்சவரம்பு பின்பற்றப்படுகிறது.

ஹரியானா மாநிலத்தில் குடும்ப அட்டைக்கு 15 நாட்கள், மின் இணைப்பிற்கு 8 நாட்கள், ஜாதி சான்றிதழ் பெற 7 நாட்கள், நிலப்பதிவு, ஓட்டுநர் உரிமத்திற்கு ஒரு நாள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பிற்கு 12 நாட்கள் எனக் கால உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுச் சேவையைப் பெற லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது. இதைத் தடுக்க சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். எனவே, தமிழகத்தில் பொதுச் சேவை தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத, தவறான தகவல் அளிக்கும், கால தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பொதுச் சேவை சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்