Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எடியூரப்பாவை புறக்கணித்துவிட்டு கர்நாடகத்தில் ஆட்சி நடத்த முடியாது- தேவேகவுடா

ஆகஸ்டு 02, 2021 11:19

பெங்களூரு: முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல் மந்திரி பசவராஜ் பொம்மை என்னை நேரில் சந்தித்துப் பேசினார். அவரை நான் வாழ்த்தினேன். அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மையும், நானும் நண்பர்கள். ஒரே கட்சியில் பணியாற்றினோம். இது பசவராஜ் பொம்மைக்கு தெரியும். நல்லாட்சி நடத்துமாறு அறிவுரை கூறினேன். மாநில பிரச்சினைகளில் பசவராஜ் பொம்மைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

எடியூரப்பாவை நீக்குமாறு நாங்கள் கோரவில்லை. பா.ஜ.க.வில் 75 வயதானவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் எடியூரப்பாவுக்கு அதில் இருந்து விதிவிலக்கு அளித்து மேலும் 2 ஆண்டுகளில் பதவியில் தொடர அக்கட்சி மேலிடம் அனுமதி வழங்கியது. எடியூரப்பா ஆட்சியில் இருந்தபோது நாங்கள் எந்த தொந்தரவும் அளிக்கவில்லை.

கர்நாடகத்தில் எடியூரப்பாவை புறக்கணித்துவிட்டு ஆட்சியை நடத்த முடியாது. அடுத்து தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் வரவுள்ளது. அதை நாங்கள் எதிர்கொள்வோம். அதன்பிறகு சட்டசபை தேர்தல் வரும். சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. பசவராஜ் பொம்மை அரசுக்கு நெருக்கடி நிலை வந்தால் ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன் என்றார்.

தலைப்புச்செய்திகள்