Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்- பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

ஆகஸ்டு 01, 2021 06:53

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்பாள் சன்னதியில் இன்று காலை 10 மணிக்குகொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் சுவாமி கோவிலில் இருந்து அன்னை காந்திமதியம்மாள் தனது கோவிலுக்கு எழுந்தருளினார்.

கொடியேற்றத்தையொட்டி கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு கோபுர ஆரத்தி மற்றும் நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. முன்னதாக கோவில் உட்பிரகாரத்தில் கொடிபட்டம் வலம் வந்து பூஜைகள் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 4-ந்தேதி காலை அம்பாளுக்கு வளைகாப்பு வைபவமும், 10-ம் திருநாளன்று அம்பாளுக்கு ஆடிப்பூர முளைப்பாரி கட்டும் வைபவம் ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெறுகிறது.

தற்போது தமிழகத்தில் 3-வது அலை வராமல் தடுக்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தடை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை செய்ய உத்தரவிட்டுள்ளார். நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் கோவில்களில் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் கட்டளைதாரர்கள் கட்டளைக்கு தேவையான அபிஷேக பொருட்கள், புஷ்ப வகைகள் மற்றும் பரிவட்டங்களை கோவில் அலுவலகத்தில் வழங்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி கோவிலின் நான்கு வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்