Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமித் ஷாவுடன் ஓபிஎஸ், பழனிசாமி சந்திப்பு: சசிகலா விவகாரம், அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்

ஜுலை 28, 2021 10:38

புதுடெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப் பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். அவரிடம், சசிகலா விவகாரம், தமிழக அரசியல் நிலவரம்குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, தற்போது எதிர்க்கட்சியாகியுள்ளது. இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவுசெய்து, சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுதவிர மாநிலங்களவையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கான தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் டெல்லி சென்றனர். பிரதமர் மோடியை ஓபிஎஸ், பழனிசாமி இருவரும்நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். தமிழகத்துக்கான தடுப்பூசி, மேகேதாட்டு விவகாரம், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம்குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் பழனிசாமி தெரிவித்தார். ஆனால், தமிழக அரசியல் நிலவரம், சசிகலா விவகாரம் குறித்து பேசியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓபிஎஸ்,பழனிசாமி, அதிமுக எம்.பி. தம்பிதுரை, எம்எல்ஏ தளவாய்சுந்தரம் ஆகியோர் சந்தித்தனர். பின்னர்செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, ‘‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசியல் பேசவில்லை’’என்றார். இருப்பினும், தமிழக அரசியல் நிலவரம், மாநிலங்களவைத் தேர்தல், சசிகலா விவகாரம் குறித்துஅமித்ஷாவுடன் இருவரும் விவாதித்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்