Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆண்டிபட்டியில் மீன் கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஜுலை 27, 2021 02:59

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதியிலுள்ள சீதாராம்தாஸ் நகரில் வசித்து வருபவர் ஜாகீர் உசேன் (வயது 55). இவர் ஆண்டிப்பட்டியில் மீன்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை மர்மநபர்கள் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி, தீவைத்து ஜாகிர் உசேன் வீட்டில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்து எழுந்த ஜாகீர் உசேனின் கால்கள் மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த ஜாகிர் உசேனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்தில் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை கண்டுபிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது தொழில் போட்டியால் நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிப்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்